கொள்ளிடம் கதவணை பணி 4 மாதங்களில் முடிவடையும் ரங்கம் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தை தொடங்கும் முன் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, முதல்வரை இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், ராஜகோபுரம் அருகே மக்கள் மத்தியில் முதல்வர் பழனி சாமி பேசியது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதியான ரங்கத் தில், அவர் செய்த சாதனைகளால் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. முக்கொம்பில் உடைந்த கொள்ளி டம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 3 அல்லது 4 மாதங்களில் நிறை வடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

தொடர்ந்து, சோமரசம்பேட்டை யில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடி னார். அதன்பின், மணப்பாறையில் பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரங் களை வழங்கி ஆதரவு திரட்டினார். பின்னர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முதல்வர் பழனி சாமி பேசியது: புதுக்கோட்டை மாவட்டமானது ஜல்லிக்கட்டு வீரர்கள் விளையாடும் மைதானமாக திகழ்கிறது. கடந்த முறை உலக சாதனை நிகழ்த்திய விராலிமலை ஜல்லிக்கட்டை நான் நேரில் வந்து தொடங்கி வைத்தேன். நிகழாண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

பின்னர், திருவெறும்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியது: கடந்த மக்களவைத் தேர்தலில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றி வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழக வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. பொய்களுக்காக நோபல் பரிசு வழங்கலாம் என்றால் ஸ்டாலினுக்கு வழங்கலாம். அவர் கட்சியில் மூத்த நிர்வாகிகளை கழற்றி விட்டு, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி, கனிமொழி, தயாநிதி ஆகியோரை மட்டுமே பிரச்சாரத்துக்கு அனுமதிக்கிறார்.

கிராமசபைக் கூட்டங்களை அரசு தான் நடத்த முடியும். ஆனால், மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. மக்களை தந்திரமாக ஏமாற்றுவதில் முதலிடத்தில் இருப்பது ஸ்டாலின் தான். திமுக ரவுடியிசமும், அராஜகமும் செய்யும் கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. அதில் அவர்களது வாரிசுகள் மட்டுமே மேன்மையடைய முடியும்.

திருச்சி பால்பண்ணை- துவாக் குடி சர்வீஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திமுகவினர் தொடுத்த வழக்குகளால் தான் இந்த பணி தாமதம் ஆனது. இந்த திட்டத்தை துரிதமாக முடிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுபத்ராதேவி, முருகா, பூமதி உள்ளிட்டோர் முதல்வர் முன்னிலை யில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர், சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மண்டலப் பொறுப்பாளர் சி.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் டி. ரத்தின வேல், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி, திருச்சி ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் நத்தர்வலி தர்ஹாவில் முதல்வர் வழிபாடு நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்