திருப்பூர் மாநகரில் குறைந்த குற்றச் சம்பவங்கள் மோட்டார் வாகன விதி மீறியதாக 4 லட்சம் வழக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் நடப்பாண்டில் மோட்டார் வாகன விதிமீறல் தொடர்பாக 4 லட்சம் வழக்குகள்பதிவு செய்யபட்டுள்ளதாகவும், மாநகரில் 40 சதவீதம் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டு நிகழ்ந்த குற்றங்கள், நிலுவை வழக்குகள், அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத சம்பவங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர்க.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் துணை ஆணையர் க.சுரேஷ்குமார் மேற்பார்வையில், துரித நடவடிக்கையை போலீஸார்மேற்கொண்டதால் குற்றச்சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

குற்ற வழக்குகளும், நடவடிக்கையும்..

திருப்பூர் மாநகரில் 2020-ம் ஆண்டில் 20 கொலை வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. அனைத்துகொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் நிகழ்ந்த 2 கூட்டுக்கொள்ளைச் சம்பவங்கள், 20 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டுப்போன சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

வீடுகளின் உள்ளே புகுந்து திருடிய சம்பவங்கள் தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

திருட்டுப்போன சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 43 லட்சத்து 85,550 ரூபாய் ஆகும். அவற்றில் ஒரு கோடியே18 லட்சத்து 83,770 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த 2019-ம் ஆண்டு 287 திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2020-ம் ஆண்டில் 180 திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளால் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு சுமார் 40 சதவீதம் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

குண்டர் தடுப்புச் சட்டம்

பொது மக்களுக்கும், பொதுச்சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படும்வகையில் தொடர் குற்றங்களில்ஈடுபட்டு வந்த 46 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 21 பேரும், 2018-ல் 10 பேரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 34 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்பனை தொடர்பாக 686 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,940 கிலோ அளவுள்ள பொருட்களும், 2 இருசக்கர வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன விதிமீறல்

மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதாக கடந்த 2019-ம் ஆண்டில் 2 லட்சத்து 23,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டு 4 லட்சத்து 16,559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட 87 சதவீதம் வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தலைகவசம் அணியாமல் சென்றது தொடர்பாக மட்டும் 2 லட்சத்து 44,217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 59 சதவீதம் இறப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்