அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். இதில் யாரேனும் இடையில் வந்தால் ஒதுக்கி வைத்துவிடுவோம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என அறிவித்துள்ளார். அது தான் எங்களுக்கு வேதவாக்கு. இதில் யாரேனும் இடையில் வந்தால், அவர்கள் வீணாகப் போய் விடுவார்கள். அவர்களை நாங்கள் ஒதுக்கி வைத்து விடுவோம். பாஜக தேசிய கட்சி என்பதால், பல்வேறு மாநிலங்களில் தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்கள் நடைமுறைப்படி தேர்தலுக்கு பின்னர் அவர்களது தேசிய தலைமை கூடி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். அது அவர்களது நடைமுறை. ஆனால், தமிழகத்தில் தேர்தலுக்குப் பின்னர் தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் என கூற அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அதிமுக தலைமை ஏற்கெனவே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துவிட்டது. எங்கள் கூட்டணியில் வருபவர்கள், அதனை ஏற்றுக்கொண்டு தான் வருவார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது உள்ள ஆசையால் எதை பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. நடிகர் ரஜினி காந்த்துக்கு இறைவன் நீண்ட ஆயுளும், அமைதியான வாழ்வும் வழங்கட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago