திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு 228 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
சிறுமிகளுக்கான அலைகள் குழந்தைகள் இல்லம் திறப்பு விழா திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பாதுகாப்பான சூழலில் கல்வி கற்கும் இல்லத்தில் குழந்தைகளாக நீங்கள் உள்ளீர்கள். உங்களுக்கு கல்வி தான் வாழ்க்கையின் எதிர்காலம். நீங்கள் என்ன ஆக வேண்டும் என சிந்தித்துசெயல்பட வேண்டும்.
இரட்டிப்பு முயற்சியுடன் படித்தால், பிற்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும். உங்களது முதல் கவனம் கல்வியில்தான் இருக்க வேண்டும். படிப்புடன் சேர்ந்து விளையாட்டு, யோகாசனம், நடனம் உட்பட மற்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், உங்களது முழு திறமைகளும் வெளிப் படும்.
இந்தியாவில் பல்வேறு தொழில்முறை வாய்ப்புகள் உள்ளது. நல்ல வேலை கிடைத்தால், உங்களது எதிர்காலம் நன்றாக அமையும். அதற்கு படிப்புடன் சேர்த்து, உங்களுக்கு பிடித்த பிரிவுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
நாளிதழ்களை தினசரி 15 முதல் 30 நிமிடங்கள் படிக்க வேண்டும். உலகத்தில் நடக்கும் அரசியல், விளை யாட்டு உட்பட அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு செயல்படுங்கள். உங்களின் மொழி, தொடர்பு, ஆளுமை, பேச்சு என அனைத்திலும் உங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சைல்டு லைன் 1098 மூலம், இந்தாண்டு 228 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் இணைந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அனைத்து இல்ல குழந்தைகளுக்கும் நடத்தப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக, மாணவர்களின் யோகாசனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago