வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப் பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு பணிகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் 3,094 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,378 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2,549 விவிபாட் கருவிகளை பாது காப்பாக வைத்துள்ளனர். இந்தமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில், 17 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாட்டு கருவிகள்,199 விவிபாட் கருவிகள் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலை இருப்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். இந்த இயந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை அறியும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 போலி வாக்காளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னத்துடன் ஒரு நோட்டா சின்னம் பொருத்தப்பட்டு ஆயிரம் வாக்குகள் வீதம் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும் போது, ‘‘தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் வேலூர் மாவட் டத்தில் வாக்குச் சாவடி இயந்திரங் கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் கருவிகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவு செய் யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
மாவட்டத்தில் தற்போது 1,301 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா பரவல் இருந்தால் பிஹார் மாநில தேர்தல் நடைமுறைப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1,000 வாக்காளர்கள் வீதம் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 529 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட வேண்டும். தேர்தல் ஆணை யம் அறிவித்தால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அப்போது, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago