பொங்கல் உதவித்தொகைக்கு டோக்கன் வழங்கும் செயல்பாடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்பத்துக்கு தலா ரூ.2500 வீதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் ஆங்காங்கே அதிமுகவை சேர்ந்தவர்கள் வீடு, வீடாகவும், ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கி வருகின்றனர். இந்த தொகை, அதிமுக கட்சி சார்பில் கொடுப்பதை போன்று சித்தரித்து வருகின்றனர். இந்த செயல் முற்றிலும் சுயநலம் மிகுந்த உள்நோக்கம் கொண்டது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக அதிமுகவை சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமாக கிடைக்கும் வருவாயில் இருந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட நிதி வழங்குகிறது. ஆனால், இதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் அரசு ஊழியர்களுடன் வீடுகளுக்கு சென்றும், ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்குவது அப்பட்டமான சட்ட விதிமீறல் மற்றும் முறைகேடு. எனவே, இந்த முறைகேடான செயலை அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்களைத் தவிர மற்ற எவரும் கலந்துகொள்ள அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago