திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஹோட்டல், கடைகளில் பயன் படுத்திய எண்ணெய்யை சுத்தி கரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்க வேண்டும் என்று வணிர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பான கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ஜெயராம்பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆனந்தா ஆயில் கார்ப்பரேஷன் ரெக்யூர்மெண்ட் மேலாளர் முனிராஜ் வரவேற்றார்.
இதில் திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்கள், வடை கடைகள் உள்ளிட்ட சிறு கடைகளில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யை குறைந்த விலைக்கு சாலையோர வியா பாரிகள், சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்று பயன்படுத்துவதால் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
இதனால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் கடைகளுக்கு நேரில் சென்று கிலோ ரூ.25-க்கு பெற்றுக் கொள்ளும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மூலம் பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இதற்கு வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, நத்தம், ஆத்தூர், சாணார்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த உணவக, பேக்கரி, டீ கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago