ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோச மங்கையில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்கு பாத்தியப்பட்ட மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி கோயில் உள்ளது.
இங்கு தனி சன்னதியில் மரகத நடராஜர் அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்புப் பெற்றது. மூலவர் விலை மதிப்பற்ற பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் விசேஷமாகப் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் சந்தனக் காப்பு களையும் அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடராஜர் சந்தனக் காப்பு இன்றி, மரகதக் கல் திருமேனியராய் காட்சி தருவதால் ஏராளமானோர் தரிசனம் செய்வர்.
இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு களையும் அபிஷேகம் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணிக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் 200-க்கும் குறைவான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மரகத நடராஜருக்கு நேற்றிரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி, விடியவிடிய நடைபெற்றது. அதையடுத்து இன்று (டிச.30) அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசக சுவாமிகளுக்குக் காட்சி கொடுத்து சிறப்பு நாகஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளி ரிஷப சேவையும் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago