கிருஷ்ணகிரியில் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி கோவை வியாபாரியிடம் ரூ.95.43 லட்சம் கொள்ளை

By செய்திப்பிரிவு

கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.95.43 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை கிருஷ்ணகிரி போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி அஸ்வின். இவரை தொடர்பு கொண்ட ராஜசேகர் என்பவர், தன்னிடம் அதிகளவில் தங்கம் உள்ளதாகவும், ரூ.1 கோடி பணத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தால் 2 கிலோ தங்கம் தருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அஸ்வின், தனது 2 நண்பர்களை அழைத்து கொண்டு ரூ.95.43 லட்சம் பணத்துடன் டிராவல்ஸ் வேனில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு வந்தார். கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலம் அருகே வேனை நிறுத்திய அஸ்வின், ராஜசேகரை தொடர்பு கொண்டார். அங்கு ராஜசேகர், தனது கூட்டாளிகள் சிலருடன் காரில் வந்தார். பணத்துடன் அஸ்வின் உட்பட 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டார்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் பனகமூட்லு பகுதியில் தனியார் கல்லூரி அருகே அஸ்வின் உள்ளிட்டவர்களை காரில் இருந்து கீழே இறங்குமாறு கூறிய ராஜசேகர், அவர்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு ரூ.95.43 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். அதிர்ச்சியடைந்த அஸ்வின் நேற்று மாலை கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல் சிவகாசி, காஞ்சீபுரம், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்