வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப்பெறக் கோரி, டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்து க்கு ஆதரவு தெரிவித்து ‘சென்னைநோக்கி' என்ற போராட்டத்தை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள வீட்டில் வைத்துநேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உரிமைக்காக போராடி துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த விவசாயிகள் நினைவிடத்தில் இருந்து திட்டமிட்டபடி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமையில் வாகனப் பேரணியாக சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட தயாராகினர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த பெருமாநல்லூர் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கைதுசெய்யப்பட்ட ஏ.கே.சண்முகத்தை விடுதலை செய்ய விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஏ.கே.சண்முகம் பெருமாநல்லூர் அழைத்து வரப்பட்டார். அதற்கு பிறகு அவரோடு பேரணி செல்ல முயன்றதால், விவசாயிகள் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதைக்கண்டித்து, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று இரவு வரை ஈடுபட்டனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறும்போது, "இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago