திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதிகளில் குழந்தை தொழிலாளர் களாக பணியில் அமர்த்தப்பட்டமற்றும் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 24 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் வழிகாட்டுதலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மேற்பார்வையிலும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலும் அமைக்கப்பட்ட குழுவினர், சமூக நலத் துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் குழந்தைகளை பிச்சை எடுக்க உட்படுத்துதல், குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிய வைத்தல் உள்ளிட்ட செயல்கள் நடைபெறுகின்றனவா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
இதில், கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான 15 நாட்களில் பிச்சை எடுக்க உட்படுத்தப்பட்ட 10 குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 14 குழந்தைகள் என 24 குழந்தைகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் 23 பேர்,பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒரு குழந்தையை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.மேலும், காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 4 குழந்தைகள், சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தைகளை பிச்சை எடுக்க தூண்டிய பெற்றோர் மீது பெருமாநல்லூர் காவல்நிலையத்திலும், காங்கயம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீஸார் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago