தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட டிச. 27, 1956 நாளை நினைவுகூரும் வகையில், டிச. 23 முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்த முறை தமிழக அரசு கரோனாவைக் காரணம் காட்டி போதிய நிதி ஒதுக்காததால், அனைத்து மாவட்டங்களிலும் பெயரளவில் மட்டும் இந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசு, இந்நிகழ்வுக்கு போதிய நிதியை ஒதுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழறிஞர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஆண்டு மாவட்டத்துக்கு ஒரு லட்சம் என ஒதுக்கீடு செய்து ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டது. அதன்படி ஊர்வலங்கள், கருத்தரங்குகள், தமிழ் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இம்முறை கரோனாவை காரணம் காட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால், பல மாவட்டங்களில்பெயரளவுக்கு மட்டுமே ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டது. ஆட்சியரின் அறிக்கையோடு, கடந்த 23-ம் தேதி மட்டும்பெயரளவில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை நலிந்துபோய் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago