திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்கள் தொடக்கம் ஆட்சியர் பொன்னையா தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், அலிம்கோ நிறுவனம் மூலம் இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் பிரைவேட் லிமிடெட் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், நவீன செயற்கைக் கால், கை மற்றும் காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

அதற்கான தேர்வு முகாம்கள் இன்று (டிச. 28-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ள இம்முகாம்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற உள்ளன.

இந்த தேர்வு முகாம்கள், இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆவடி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியிலும், நாளை ( 29-ம் தேதி) காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளன.

அதே போல், இம்முகாம்கள், வரும் 30-ம் தேதி காலை, திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதியம், ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-ம் தேதி காலை, திருவள்ளூர், பெரியகுப்பம் டி.இ.எல்.சி. பள்ளியிலும், மதியம், பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளன.

ஆகவே, இம்முகாம்களில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE