சங்கரன்கோவில் அருகே சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து காயமடைந்த 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகே கடந்த வாரம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் காயம் அடைந்த காஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் தனியார் காஸ் ஏஜென்ஸி உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்டம் (70) என்பவர் மேலாளராகவும், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த காளி (36) என்பவர் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராகவும், திருவேங்கடம் அருகே உள்ள வீரணாபுரத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் (25) வாகன ஓட்டுநராகவும் வேலை பார்த்தனர். திருமணமாகாத வைகுண்டம், தனியாக வசித்து வந்தார்.

கடந்த 23-ம் தேதி கம்மா பட்டியில் வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த சிலிண்டரை அடுப்பில் பொருத்தி பயன்படுத் தியபோது, தீ எரியவில்லை. இதனால், அந்த சிலிண்டரை பசுபதி பாண்டியன் மீண்டும் காஸ் ஏஜென்ஸிக்கு கொண்டு வந்துள்ளார். இதுபற்றி வைகுண்டத்திடம் கூறியபோது, சிலிண்டரை தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கொண்டுவருமாறு கூறியுள்ளார். அதன்படி காளி, பசுபதி பாண்டியன் ஆகியோர் சிலிண்டரை வைகுண்டம் தங்கியிருந்த அறைக்கு கொண்டு சென்றனர்.

சமையல் செய்துகொண்டு இருந்த வைகுண்டம், பழுதான சிலிண்டர் மூடியை கம்பியால் குத்தியுள்ளார். அப்போது திடீரென காஸ் வெளியேறி, அடுப்பு எரிந்துகொண்டிருந்ததால் தீப்பிடித்து வேகமாக பரவியது. இதில், 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வைகுண்டம், காளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்