நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா ஆகியவை தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பூங்காக்களை பார்த்து ரசிக்க வசதியாக, பல வண்ண மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டு, பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 என வசூலிக்கப்பட்டு வந்தது. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதனால், புத்தாண்டை கொண்டாட உதகைக்கு சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பூங்கா நுழைவுக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. புதிய கட்டணத்தின்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30 என வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பூங்காபராமரிப்புப் பணிகள், பணியாளர்கள் ஊதியம், மலர் விதைகள் உள்ளிட்ட பல தேவைகளுக்காக கட்டண உயர்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கட்டணத்தை ரூ.10 உயர்த்தியுள்ளோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago