குழந்தைகள் காணாமல்போனதாக 5 மாதங்களில் திருப்பூரில் 71 வழக்குகளில் 58 பேர் மீட்பு 15 நாட்களில் 42 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

கடந்த 5 மாதங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டபகுதிகளில் குழந்தைகள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட 71 வழக்குகளில், 58 பேரை மாநகரதனிப்படை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பூர் மாநகரில் காணாமல்போன சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை ஆணையர் க.சுரேஷ்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் சு.மோகன் ஆகியோரின் மேற்பார்வையிலும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பதுருன்னிஷா பேகம் தலைமையிலும் 2 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்களை கொண்டதனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தொடர் தேடுதல் மற்றும் விசாரணையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டனர். அந்த வகையில், இதுவரை திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 71 சிறுவர், சிறுமியர் காணாமல் போன வழக்குகளில், கடந்த 5 மாதங்களில் 58 குழந்தைகளை தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள், குழந்தைகள் நலக்குழு மூலமாகபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 10 முதல் 24-ம் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் 10 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில், கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகளும் கண்டுபிடிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, கடந்த 15 நாட்களில் மட்டும் சிறு வயதிலேயே உற்பத்தி நிறுவனங்கள், கடைகள்,பேக்கரிகள், ஆலைகள் உள்ளிட்டஇடங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 42 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுக்கும் சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடமும், பாதுகாவலர் இல்லாத குழந்தைகள் பாதுகாப்புஇல்லங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். தனிப்படையினரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்