சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளானகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை சாந்தோம்தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை - மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. இதுமட்டுமின்றி, கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து நேற்று வீடுகளில் கேக் வெட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

செங்கை மாவட்டம் மாமல்லபுரம், கேளம்பாக்கம், கல்பாக்கம், கோவளம் மற்றும் புதுப்பட்டினம், கல்பாக்கம் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சிறுதாவூர் ஜெபமே ஜெயம் தேவாலயத்திலும், கேளம்பாக்கம் தூய கிறிஸ்து மீட்பர் தேவாலயத்திலும் நடைபெற்ற திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதுபோல் திருக்கழுக்குன்றம், கோவளம், அச்சிறுப்பாக்கம் மழை மாதா தேவாலயங்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. காஞ்சி சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபை கிறிஸ்து நாதர் தேவாலய கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் புனித பிரான்சிஸ் சலோசியர் தேவாலயம், திருத்தணி சிஎஸ்ஐ தேவாலயம், பழவேற்காடு புனித மகிமை மாதா தேவாலயம், கும்மிடிப்பூண்டி புனித பால் தேவாலயம், ஆரம்பாக்கம் வானதூதர்கள் அன்னை தேவாலயம், ஆவடி புனித பால் தேவாலயம் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்