வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்ட கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் நேற்று அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிநடைபெற்றது. திருப்பலி முடிவில்கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். முருகன்குறிச்சியில் உள்ள தூயதிரித்துவ பேராலயத்தில் சிறப்புஆராதனை, தேவசெய்தி, உபசரணை நடைபெற்றது.

பாளையங்கோட்டை புனித அந்தோணியார் தேவாலயம், சாந்தி நகர் குழந்தைஏசு தேவாலயம், கேடிசி நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூயமீட்பரின் ஆலயம் உட்பட திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தென்காசி

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தென்காசி சிஎஸ்ஐ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கடையம் அருகே மேட்டூரில் உள்ள பரிசுத்த திருத்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதற்கு முன்தினம் பாயசப் பண்டிகை நடைபெற்றது. பண்டிகையை சேகர குரு எமில்ராஜ் மோசஸ் தொடங்கி வைத்தார். ஆண்கள் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று வந்தனர். பின்னர், பாயசம் தயாரித்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சின்னகோயில் எனப்படும் திருஇருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் ஸ்டீபன் தலைமையில், பங்குத்தந்தை ரோலிங்டன் முன்னிலையில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி தூய பனிமய பேராலயத்தில் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையிலும், புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையிலும், சாயர்புரம் ஞானபிரகாசியார் ஆலயம், அன்னம்மாள் ஆலயங்களில் பங்குத்தந்தை அமலதாஸ் தலைமையிலும், ஸ்டேட் பாங்க் காலனிஅன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத் தந்தை ஜெரோசின் அ.கற்றார் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் சேகரகுரு ஆனந்த் சாமுவேல் தலைமையிலும், மில்லர்புரம் புனித பவுலின் ஆலயத்தில் சேகர தலைவர் சைமன் தர்மராஜ் தலைமையிலும், வடக்கூர் பரி பேட்ரிக் இணை பேராலயத்தில் சேகரகுரு யோபு ரத்தினசிங் தலைமையிலும், சண்முகபுரம் பரி பேதுருஆலயத்தில் சேகரகுரு செல்வின்ராஜ் சார்லஸ் தலைமையிலும்,ஆசிரியர் காலனி பரி. திருத்துவஆலயத்தில் சேகர குரு மைக்கேல்ராஜ் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத் தந்தை அலாசியஸ் துரைராஜ் தலைமை வகித்தார்.

சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்து பிறப்பு ஆராதனையை ஆலய குருவானவர் தாமஸ் நடத்தினார். காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கின.

பிரசித்திபெற்ற கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்து, கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், கருங்கல்,மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை, ஆரல்வாய்மொழி என மாவட்டம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், சி.எஸ்.ஐ. ஆயங்கள், பெந்தே கோஸ்தே சபைகள், லுத்ரன் சபை மற்றும் ஜெபக்கூடங்களில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, ஜெபம் ஆகியவை நடைபெற்றன.

நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை, நற்செய்திகளும் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்