சேத்துப்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த கண்ணணூர் கிராமம் அம்பேத்கர் நகரில் வசித்தவர் சடையாண்டி மகன் ராஜா(19). மரம் வெட்டும் கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா, ரேணு மற்றும் சிறுவன் வள்ளிக்கண்ணன் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் மரம் வெட்டும் பணிக்காக உலகம்பட்டு கிராமத்துக்கு நேற்று காலை சென்றுள்ளார்.

இதேபோல், சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூர் கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி அலுவலர் நந்திவர்மன்(71) என்பவர் ஆரணி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கங்கைசூடாமணி அண்ணா நகர் பகுதி அருகே சென்றபோது, 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் ராஜா மற்றும் நந்திவர்மன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப் பட்டு, சேத்துப்பட்டு அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநர் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அடுத்த கங்கைசூடாமணி புதூர் கிராமத்தில் வசித்த பொக்லைன் இயந்திர ஓட்டுநர் சுந்தர். இவரது தாத்தா உயிரிழந்ததால், சென்னையில் இருந்து வந்துள்ளார். இவர், நேற்று முன் தினம் இரவு, அதே பகுதியில் உள்ள கடை வீதிக்கு சென்று பொருட் களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அண்ணா நகர் வழியாக வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சுந்தர் உயிரிழந்தார். இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

கங்கைசூடாமணி பகுதியில் உள்ள சாலையில் தொடர் விபத்துகளை தடுப்பதற்காக வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சேத்துப்பட்டு – ஆரணி சாலையில் உள்ள 2 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும். மதுக்கடைக்கு வருபவர்களால் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது” என்றனர்.

அவர்களிடம் சேத்துப்பட்டு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்