சிவகங்கை மாவட்டத்தில் 3 வட்டாரங்களில் விழா முன்பணம் வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் 3 வட்டாரங்களில் விழா முன்பணம் வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரக் கல்வி அலுவ லகங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, பணப்பலன் களைப் பெற்றுத் தருவது, பள்ளிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு விழா முன்பணம் வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை வட்டாரக் கல்வி அலுவலர்கள் 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்வர்.

அதன்படி இந்த ஆண்டு சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 9 வட்டாரங்களில் விழா முன்பணம் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் திருப்புவனம், திருப்பத்தூர், கல்லல் ஆகிய 3 வட்டாரங்களில் வழங்கவில்லை. தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தியும் இதுரை வழங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தீபாவளி சமயத்திலேயே 9 வட்டாரங்களிலும் விழா முன்பணம் கொடுத்துவிட்டனர். ஆனால் 3 வட்டாரங்களில் மட்டும் பணத்தை தர மறுக்கின்றனர். இது வட்டார கல்வி அலுவலர்களின் மெத்தனத்தையே காட்டுகிறது. இது பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டதற்கு, அனைத்து வட்டாரங்களுக்கும் ஜூலை மாதமே நிதி ஒதுக்கிவிட்டதாகக் கூறுகிறார். ஒதுக்கிய நிதி எங்கே உள்ளது என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்