புதிய வகை கரோனா தொற்று பரவல் எதிரொலி பிரிட்டனில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் மருத்துவர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் மருத்துவர்கள் மூலம் கண் காணிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் புதிய வகை கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது என சுகாதாரத்துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் டிசம்பர் 22-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து 138 பேர் வருகை தந்துள்ளனர்.

இதில் பிரிட்டனில் இருந்து வந்த 6 பேரும் அடங்குவர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனை வருக்கும் எந்தவித அறிகுறியும் கண்டறியப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். விமானங்கள் மூலம் வருகை தரும் நபர்களுக்கு 96 மணி நேரத்துக்கு உள்ளாக கரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என்ற சான்று அளிக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் எல்லைகள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

சேலம்

சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 16 பேருக்கு பரிசோதனை மூலம் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று இல்லை. எனினும், அனைவரையும் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தி, கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையை தவறாமல் கடைபிடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறும்போது, மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியபடி, பிரிட்டனில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மேலும் 6 பேர் பிரிட்டனில் இருந்து ஈரோடு வந்தது தெரியவந்துள்ளது.

அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்