திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்டமாக 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அரியலூர் புறவழிச்சாலையில் திமுக மாவட்ட அலுவலகத்தையும் அங்குள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், உதயநிதி பேசியது:
தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பழனிசாமி, தனக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கும், முதல்வர் பதவி தந்த சசிகலாவுக்கும் உண்மையாக இருக்கவில்லை. மாறாக, மத்திய அரசுக்கு அடிபணிந்து ஆட்சி செய்து வருகிறார்.
சில அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வர். இன்னும் நான்கு மாதங்களில் வரக் கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ அரியலூர் ஆறுமுகம் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்தார். அதன்பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டர்.
அதைத்தொடர்ந்து, கீழப் பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago