திருப்பூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புகொள்முதல் செய்த விவசாயிகளுக்கு ரூ.5.75 கோடி நிலுவை வைத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் புகார் அளித்தனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் குறைகளை தெரிவித்து பேசியதாவது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், எங்களுக்கு ரூ.5.75 கோடி தொகை பாக்கி வைத்துள்ளது. கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரித்த நிலையில், விவசாயிகளிடம் போடப்படும் ஒப்பந்தம் என்பது ஆலை நிர்வாகத்திடம் குறைவாக உள்ளது. இதனால் தனியார் கரும்பு ஆலையை விவசாயிகள் நாடுகின்றனர். ஆலையை முறையாக பராமரிக்காததால், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த 4 முதல் 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உரிய நேரத்தில் அரவையை தொடங்க வேண்டும். பதிவு செய்த அனைத்து விவசாயிகளிடமும் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஆவினில் பணம் நிறுத்திவைப்பு
பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினில் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 50 நாட்களுக்கு மேலாக பணம் நிறுத்தி வைக்கப்படுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக பணம் பட்டுவாடா செய்யவேண்டும். பல்லடம் பிஏபி வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வட்டமலைக்கரைக்கு தண்ணீர்
உப்பாறு அணைக்கு தண்ணீர் தந்தால், அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாயிகளும் பயன்பெறுவர். அவிநாசி அருகே தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய ஊராட்சிகளை பாதிக்கும் தொழில்பூங்காவை (சிப்காட்) அமைக்கக்கூடாது. அமராவதி அணை, மூன்று முறை நிரம்பியும், சுமார் 17000 கன அடி நீர் வீணாகியது. வறட்சியில் வாடும் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தந்தால், ஏராளமான விவசாயக் குடும்பங்கள் பயன்பெறும். பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago