உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி கிராமத்தில் கிணறு தோண்ட அதிக திறன்கொண்ட வெடிமருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்

By செய்திப்பிரிவு

உடுமலை அருகே தனியார் கிணறு தோண்ட அதிக திறன் கொண்ட வெடிமருந்து பயன்படுத்தப்படுவதாக, கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் உடுமலையை அடுத்த விளாமரத்துப்பட்டி கிராம மக்கள் நேற்று அளித்த மனுவில், "எங்கள் கிராம குடியிருப்புகளில் இருந்து 100 அடிக்குள் தனியார் தோட்டம் உள்ளது.

அங்கு தற்போது கிணறு வெட்டும் பணி நடந்து வருகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அதிக திறன் கொண்ட வெடி மருந்துகள் பயன்படுத்தி கிணறு தோண்டப்படுகிறது. இதனால், அருகே வசிப்பவர்கள் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெடி வைத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தி, உயிருக்கும், வீட்டுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

டாஸ்மாக் மூடப்படாதது ஏன்?

ஆட்சியர் க.விஜயகார்த்திகே யனுக்கு திருப்பூர் எம்.பி. சுப்ப ராயன் அனுப்பியுள்ள கடிதத்தில், "திருப்பூர் வடக்கு வட்டம் வாவி பாளையம் பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி, அதே பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடினார்கள். இதைத்தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 3 மாதங்களுக்குள் வேறு இடத்துக்கு கடையை மாற்றுவது, வேறு இடம் கிடைக்கவில்லை என்றால் கடையை நிரந்தரமாக மூடுவது என அதிகாரிகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டு, எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடையை அப்புறப்படுத்தவோ, மூடவோ இல்லை. டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்