கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் 20 இடங்களில் ரூ.6.50 கோடியில் மதிப்பில் அதிநவீன கேமராக்கள், சோதனைச்சாவடிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக உள்ளது. சுமார் 60 கிலோ மீட்டர் உள்ள இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும், கொள்ளைச் சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன.
விபத்துகளில் தவறு இழைக்கும் வாகனங்களைக் கண்டறிதல், அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், குற்றச் சம்பவங்களை தடுத்தல் ஆகியவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 இடங்களில் அதிநவீன கேமராக்கள், 2 சோதனைச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வரும் அனைத்து வாகனங்களின் புகைப்படமும் கேமரா மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, உடனடியாக தகவல் பெற்று வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6.50 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும், பணிகள் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் அடுத்து, ஓசூர் செல்லும் சாலையில் ஒரு சோதனைச்சாவடியும், ஓசூர் அருகே பேரண்டப் பள்ளியில் மற்றொரு சோதனைச் சாவடியும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் குற்றங்கள், விபத்துகள் வெகுவாக குறையும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago