கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு பட்டாசு கடை வைக்க இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெயிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற இ-சேவை பொதுசேவை மையங்களில் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டாசுகளை உதிரிகளாக விற்காமல் கட்டுக்கட்டாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு வாங்குபவர்கள் கடைகளுக்கு வெளியே நின்றுதான் வாங்கவேண்டும். கடைக்குள் சென்று பட்டாசுகளைத் தேர்வு செய்யக் கூடாது. பட்டாசு கடைக்குள் தீ அணைப்பான்கள், மணல் வாளிகள் இருக்க வேண்டும். பட்டாசு கடைக்கு முன்பு 200 லிட்டர் தண்ணீர் இருப்பில் இருக்க வேண்டும்.

இருப்புப் பதிவேடு அவசியம் இருக்க வேண்டும். அவசர வழியை எந்த நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சோப்பினால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் கடையின் முன்புறத்தில் விளம்பரப் பலகை அமைக்க வேண்டும். ஆல்கஹால் கலந்த கை கிருமிநாசினியை பட்டாசு கடையில் உபயோகிக்கக்கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்