வாரிய பணிகளை தனியாருக்கு அளிப்பதை கைவிட வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

மின்வாரிய பணிகளை தனியாருக்கு அளிக்கும் முடிவை திரும்பபெற வலியுறுத்தி திருப்பூரில் பெருமாநல்லூர் சாலையிலுள்ள மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை 8 மணி முதல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் மற்றும் தொழிலாளர் ஐக்கிய சங்கத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி, தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு நீதி அமைப்புகளிடம் முறையிட்டு, அதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது, அந்த உத்தரவுகளை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார வாரியத்தில் ஏற்கெனவே பணியில்இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை அளித்து, மின்சாரவாரியத்தை தனியார்மய மாக்கும்வகையில் ஒவ்வோர் உபகோட்டத்திலும் இதற்காக 20 தற்காலிகபணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையானது, ஒப்பந்ததாரர் இல்லாமல் நேரடியாக வாரியத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டால், சிறந்த முடிவு வாரியத்தில் ஏற்பட்டு விடும்.இந்நிலையில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசை கண்டித்தும், மின்சார வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பபெற வலியுறுத்தியும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட உத்தரவை திரும்பப்பெறுவதாக மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், அவுட்சோர்சிங் தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். அரசின் நடவடிக்கையைபொறுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல, பல்லடத்திலும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்