நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தலைமையில் திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, கடலூர் தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சுக்குச் சென்ற அவர், சுனாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்த மீனவ மக்களிடம் பேசினார்.
பின்னர், உதயநிதி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நான் முதல் கட்ட பிரச்சாரம் தொடங்கிய போது மக்களைச் சந்திக்க அனுமதிக்காமல் என்னைதடுத்து நிறுத்தி கைது செய்தனர். தற்போது, முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தால், ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக அரசால், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். பிரச்சாரத்திற்கு வரும் முதல்வரை கேள்வி கேட்க மக்கள் தயாராக உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, அந்த இடங்களில் மக்கள்மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி.
கரோனா காலத்தில், ‘ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று நாங்கள் கூறினோம். அப்போது நிதி இல்லை என்று கூறிவிட்டு, தேர்தல் வர உள்ளதால், ‘ரேஷன் அட்டைதரர்களுக்குரூ 2,500 வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. நாங்கள் மீண்டும் கூறுகிறோம், கூடுதலாகரூ.2,500 சேர்த்து ரூ. 5 ஆயிரமாக வழங்க வேண்டும்.
ரஜினி இன்றும் கட்சி தொடங்க வில்லை; அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? என்றார்.
தொடர்ந்து, கடலூர் அருகே எம்.புதூரில் திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டபட்டு, தற்போது வரையில் அது தொடங்கப்படாமல் இருப்பதை திமுகவினர் குறிப்பிட்டு, அங்கு உதயநிதியை அழைத்துச் சென்றனர். அந்த இடத்தை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து ராமபுரம் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், திமுக எம்எல்ஏ சரவணன், முன்னாள் எம்எல்ஏக்கள் இளபுகழேந்தி, ஐயப்பன், கடலூர் நகர திமுக செயலாளர் ராஜா, காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே பொறியியல் கல்லூரி சேர்மன் கதிரவன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago