வங்கிக் கடனை செலுத்த நெருக்கடி கொடுப்பதாக கூறி தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன், மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
தி.மலை மாவட்டம் புதுப் பாளையம் அடுத்த அம்மாபாளை யம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சரவணன். இவர், தனது மனைவி, 2 மகள்களுடன், ஒரு மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவரது செயலை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர், “4 ஆயிரம் சதுரடியில் ரூ.47 லட்சம் மதிப்பில் விவசாய பசுமைக் குடில் அமைத்தேன். தோட்டக் கலைத் துறை மூலமாக அமைத்த பசுமைக் குடிலுக்கு, ரூ.8.90 லட்சம் மானியத் தொகையை அரசு வழங்கியது. மீதமுள்ள தொகைக்காக, அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடனாக கடந்தாண்டு ரூ.20 லட்சம் பெற்றேன்.
எனது வீட்டை விற்றதன் மூலம் ரூ.19 லட்சம் கிடைத்தது. இதனை கொண்டு, பசுமைக் குடில் அமைக்கப்பட்டது. முதல் பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பாகவே, வீசிய புயல் காற்றுக்கு பசுமைக் குடில் முழுமையாக சேதமடைந்தது.
இதனால், பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. வங்கியில் வாங்கிய கடனில் ரூ.10.37 லட்சத்தை செலுத்தி உள்ளேன். இந்நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்த முடியவில்லை. அதே நேரத்தில் கடன் தொகை கேட்டு, வங்கி மூலம் கடுமையாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்றேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, விவசாயி சரவணணை காவல் துறையினர் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago