தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார கணக்கெடுப்புப் பணிக்காக வீடுதோறும் வரும் கணக்கெடுப்பாளர்களிடம் உண்மையான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் வழிகாட்டுதல், மாநிலஅரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் சார்பில், பொது சேவை மையத்தின் கணக்கெடுப்பாளர்களால், 7-வது பொருளாதார கணக்கெடுப்புப் பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே 6 முறை மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கணக்கெடுப்பின் மூலமாக சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டே, தற்போதைய பொருளாதார வளர்ச்சி, நாட்டிலுள்ள மொத்த நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, நிதி மூலதனம், உரிமையாளர்களின் விவரம் போன்றவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
அத்துடன் நுண்ணிய அளவில் திட்டமிடலுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை இறுதி செய்யவும் புதிய பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும் இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.பொருளாதார கணக்கெடுப்புப்பணிக்காக வரும் கணக்கெடுப்பாளர்களிடம் உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும். கணக்கெடுப்பின் மூலமாக சேகரிக்கப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் எவ்வித தயக்கமுமின்றி, முழுமையான விவரங்களை வழங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago