திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெருந்தொழுவில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் மையம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தலைமை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து பேசும்போது, "முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி, தாராபுரம்,மூலனூர், வெள்ளகோவில், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள், குடிமங்கலம் மற்றும் காங்கயம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 21 இடங்களில், அம்மா மினி கிளினிக் மையங்கள் செயல்பட உள்ளன.
இந்த மினி கிளினிக் மையங்கள் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், பணியாளருடன் ஊரக பகுதிகளில் காலை 8 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும், நகர்ப்புற பகுதிகளில் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். இங்கு சர்க்கரை அளவு, சளிபரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும், தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், சிறுகாயங்கள், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கான சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்படும். இந்த மினி கிளினிக் மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் மினி கிளினிக் மையங்களை அமைச்சர் திறந்துவைத்தார். பல்லடம் எம்எல்ஏ ஏ.நடராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago