கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியது:
அனைத்து கல்லூரிகளிலும் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தினமும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட வேண்டும். கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். ஒரே இடத்தில் மாணவ, மாணவியர் அமர்வதை தடுக்க பல்வேறு பிரிவுகளாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம். கல்லூரி வளாகத்துக்குள் முகக் கவசம் அணியாமல் யாரும் நடமாடக் கூடாது.
கல்லூரியின் நுழைவாயில் உட்பட வளாகத்தில் பல இடங்களில் கைகளைசுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் சோப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். விடுதி மாணவர்கள் ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை தடுக்கும் வகையில் அணி அணியாக பிரித்து இடைவெளி விட்டு உணவு வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தொற்றுதடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago