தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க திருநெல்வேலி, தென்காசி மாவட்ட புனரமைப்புக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், திருக்கோட்டி, படியேறும் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், “பொது விநியோக ஊழியர்களுக்கான புதிய ஊதிய நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, ஊதிய உயர்வு உட்பட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஊழியர்களுக்கு அனைத்துவிதமான நிதிப் பயன்கள் மற்றும் முறையான விடுப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊக்கத்தொகை தேவை
மாநிலத் தலைவர் பால்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நியாயவிலைக் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் முழுமையான அளவில் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி, பொங்கலுக்குள் சரியான சம்பள உயர்வை அறிவிக்காவிட்டால் 12 சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத்தொகுப்பாக தமிழக அரசு அறிவித்த பணத்தை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதால் மிச்சப்படும் பணம் கூட்டுறவுத் துறையால் கையகப்படுத்தப்படும் நிலை உள்ளது” என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago