கோவில்பட்டியில் ரயில்கள் நிற்க வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை: கரோனா ஊரடங்குக்குப்பின் ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற ரயில்கள், வழக்கமாக நிற்கின்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் செல்கின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரம் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி. தென் மாவட்டங்களில் பெரிய இணைப்பு மையமாக கோவில்பட்டி திகழ்கின்றது. கோவில்பட்டி வழியாக 27 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு மூலம் மட்டும் நாள்தோறும் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டித்தரும் நிலையமாக கோவில்பட்டி ரயில் நிலையம் இருந்தது. இதனால் ‘ஏ’ கிரேடு தகுதியை பெற்றுள்ளது.

தற்போது இவ்வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-சென்னை விரைவு ரயில், மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்கு புறப்படும் புனலூர் விரைவு ரயில், நாகர்கோவில் -கோவை விரைவு ரயில், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவு ரயில், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்படும் கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில், வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் நாகர்கோவில்-சென்னை ரயில் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால், ஏழை,எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்