ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் திறப்பு நூலகங்களுக்கு ரூ.1.50 கோடி நிதி; உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோரிக்கை

By செய்திப்பிரிவு

நீதிமன்ற நூலகங்களுக்கு ரூ.1.50 கோடி வரை நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாகி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் மாற்றுமுறை தீர்வு மையம் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, 2017-ம் ஆண்டு ஜூலை இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கரில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

காணொலிக் காட்சி வழியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாகி திறந்து வைத்து பேசும்போது, "புத்தகங்கள்தான் அறிவின் பிறப்பிடம். நீதிமன்ற நூலகங்களுக்கு ரூ.1.50 கோடி வரை நிதி ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை அரசு கனிவுடன்பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். அதேபோல, நீதிமன்ற நூலகத்தில்இதழ்கள், புத்தகங்களின் எண்ணிக்கை, இ-நூலகங்களை மேம்படுத்த கோரியுள்ளோம். பொதுமக்களின் நீண்ட நாள் தேவையானஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம், திருப்பூர் நீதித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி பேசும்போது, "கரோனா காலத்திலும் நீதித் துறை முக்கியப் பங்கு ஆற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளை லோக் அதாலத் மூலமாக சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு திறக்கப்பட்டுள்ள மாற்றுத் தீர்வு மையம் மிகவும் முக்கியமானது" என்றார்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "தமிழகத்தில் பிற துறைகளைப்போல நீதித் துறையும்வேகமாக வளர்ந்து வருகிறது. தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்.

நீதித் துறைக்கு தேவையானதைதமிழக அரசு அளித்து வருகிறது.வழக்கறிஞர்களின் குடும்பத்தைகாக்கும் வகையில், சேமநல நிதிரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்பேசும்போது, "நூலகத்தில் வாசிப்பதற்கு சட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கலை, இலக்கியம், பண்பாடு உட்பட பலதரப்பட்ட புத்தகங்கள் இருக்க வேண்டும்.நீதித் துறை அலுவலர்கள் மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்க வேண்டும். கடந்த 19-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடுப்பக்கத்தில் பாவெல் சக்தி எழுதிய, ‘நகர்துஞ்சும் நன்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப்படித்த viii தஸ்தாவேஜ்கள்” என்ற புத்தகத்தின் திறனாய்வு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தில், நீதித் துறை கட்டமைப்பின் செயல்பாடு குறித்து எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற புத்தகங்களை வாசிப்பதன்மூலமாக, நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளவும், தவறு இருந்தால் சரி செய்துகொள்ளவும் முடியும் என்று நம்புகிறேன். அது மட்டுமே அரசியலமைப்பு எதிர்பார்த்த நீதியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்" என்றார் .

நீதிபதிகள் வைத்திய நாதன், கிருஷ்ணகுமார் (சென்னை உயர் நீதிமன்றம்), திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி, குற்றவியல்நீதித் துறை நடுவர் பிரெஸ்னவ்,திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் மாற்றுமுறை தீர்வு மையக் கட்டிடங்களின் கட்டுமான மொத்த மதிப்பு ரூ.37 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம். இதில் மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கான அறைகள், நீதிபதிகளுக்கான அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள், மாற்று தீர்வு மையம், பொதுமக்கள் மற்றும் போலீஸார் ஓய்வறை உட்பட அனைத்து வசதிகளுடன் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. 18 நீதிமன்றங்கள், அவற்றின்அலுவலகங்கள், கோப்பு வைப்பறை, சொத்துகள் வைப்பறை, பயிற்சி மண்டபம் மற்றும் கூட்ட அரங்கம்ஆகியவற்றுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்