ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தடையின்றி நூல் வழங்க வலியுறுத்தல்

ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தடையின்றி நூல் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம், தமிழ்நாடு ஸ்பின்னிங்மில் உரிமையாளர் சங்கம் (டாஸ்மா), கோவை ‘சைமா' சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் ஆகிய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

சங்கிலித் தொடர்போல பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது திருப்பூர் பின்னலாடைத் துறை. தொழில் வளர்ச்சிக்கு உற்பத்தி சங்கிலியிலுள்ள அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். பஞ்சு விலை உயர்வால், கடந்த இரண்டு மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் உற்பத்தி செலவினங்கள் அதிகரித்தபோதும், அவற்றை சமாளித்து நிறுவனங்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது, நூற்பாலைகள் எந்தவித முன்னறிவிப்புகளும் இன்றி, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நூல் வழங்குவதை நிறுத்தியுள்ளன. புதிய ஆர்டர்களை பெறுவதில்லை. ஏற்கெனவே வழங்கிய ஆர்டருக்கும் நூல் வழங்குவதில்லை. நூற்பாலை களின் இந்த நடவடிக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினரை கவலை அடைய வைத்துள்ளது.மூலப்பொருட்கள் கிடைக்காததால், ஆடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர்களை பெற முடிவதில்லை. பெறப்பட்ட ஆர்டர்களுக்கு, குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிப்பதும் கேள்விக்குறியாகிறது.

உற்பத்தியில் ஏற்படும் தாமதம், ஒட்டுமொத்த ஆர்டரையும் இழக்கும்நிலைக்கு தள்ளிவிடும். இதனால், பெரும் வர்த்தக இழப்பு ஏற்படும். எனவே, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நூற்பாலை சங்கங்கள் தடையின்றி நூல் வழங்க வேண்டுமென, தங்களிடம் உறுப்பினராக உள்ள நூற்பாலைகளை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்