திருவள்ளூர் அருகே ஐதராபாத் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது 100-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றிவளைப்பு

By செய்திப்பிரிவு

ஐதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேரை, திருவள்ளூர் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஐதராபாத்தில் சமீபத்தில் ஏடிஎம் மையத்தில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். மேலும், 2 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டோரிடம் நடந்தவிசாரணையில், அவர்கள் தலைமறைவாக உள்ள இருவர் காஞ்சி மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட போலீஸார் இணைந்து அந்த இருவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். அப்போது, ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரும் காஞ்சிபுரத்தில் இருந்து லாரி ஒன்றில் தப்பிச் செல்வதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த லாரியைப் பின்தொடர்ந்து சென்ற திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், காஞ்சி எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸார் திருவள்ளூர் அருகே கைவண்டூர் கிராமம் அருகே அந்த லாரியை சுற்றி வளைத்து மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது லாரிக்குள் பதுங்கி இருந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம், பராக்பூரைச் சேர்ந்த ஹாசன் (35), வாசிம் (30) என்பதும் அவர்கள் ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்