ராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், கல்லூரி காலை 8.50 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் சிறிது காலதாமதத்துடன் வர நேரிடுகிறது. ஆனால்,தாமதமாக வரும் மாணவர்களை வகுப்புக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். கல்லூரியில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பருவத் தேர்வுக் கட்டணத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்ட முடியாதவர் களை பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று கட்டுமாறு கூறுகின்றனர். இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, கல்லூரிக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் வர வேண்டும். மாணவ, மாணவிகளின் நலனுக்காகவே விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரி உள்கட்டமைப்புப் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE