மின் கம்பத்தை சேதப்படுத்திய லாரி சிறைபிடிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பத்தை சேதப்படுத்திய லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் மடிகேரி மாவட்டம் பெரியபட்டாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜோதிகுமார். இவர் நேற்று காஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரியை கிருஷ்ணகிரிக்கு ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளி ஊராட்சி தென்னைக்கான் கொட்டாய் அடுத்த சவுளூர் கிராமத்தில்உள்ள காஸ் குடோனில், சிலிண்டர்களை இறக்குவதற்காக சென்றார். அப்போது கிராமத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் முற்றிலும் சேத மடைந்தது.

இதனைக் கண்டு ஆத்திர மடைந்த கிராம மக்கள், லாரியை சிறைபிடித்தனர். மேலும், காஸ் குடோனை காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். சாலையில் நடுவே ஜேசிபி இயந்திரம் மூலம் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பள்ளம் தோண்டினர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளத்தை உடனே மூட வேண்டும் எனவும் போலீஸார் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கிராம மக்கள் கூறும்போது, ‘‘மின் கம்பிகள் அறுந்து காஸ் லாரி மீது விழுந்திருந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும். காஸ் குடோனுக்கு லாரி மற்றும் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால், சாலை முழுவதும் மண் சாலையாக மாறியுள்ளது.

மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே காஸ் குடோனை உடனே இங்கிருந்து மாற்ற வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்