மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.30, பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனங்களுக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் அனைவருமே மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டு இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டபோது, வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து சேவை சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இருசக்கர வாகனங் களுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதை கோயில் நிர்வாகம் நிறுத்திவைத்தது. தற்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டு, இந்த கட்டண வசூலிப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து லயன்ஸ் சங்க பிரமுகர் கும்மட்டித்திடல் கோவிந்தராஜன் கூறியதாவது:

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு இருசக்கர வாகனங்களில் வந்துசெல்லும் பெரும்பாலானோர் உள்ளூர் பக்தர்கள். இவர்கள் கஜா புயல், கரோனா ஊரடங்கு போன்றவற்றால் தொழில் வாய்ப்பை இழந்து, பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இந்நிலையில், இந்தக் கட்டண வசூலிப்பு காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கோயில் வளாகத்துக்கு நடைபயிற்சிக்கு வந்து செல்பவர்களுக்கும், இது பெரும் சிரமமாகவுள்ளது. எனவே, இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் சங்கீதா கூறியதாவது:

ஒப்பந்தம் விடப்பட்ட காலங்களிலிருந்தே இருசக்கர வாகனங்களுக்கான கட்டண வசூலிப்பு என்றுதான் அந்த ஒப்பந்தம் அழைக்கப்படுகிறது. இதுவரை ஒப்பந்தம் பெற்றவர்கள் யாரும் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால், தற்போதைய ஒப்பந்ததாரர் கட்டணம் வசூலிக்கிறார். இது தொடர்பாக, அவரை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை. அதேநேரம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்