கடந்த 25 நாட்களாக உண்ணா விரதம் இருந்துவந்த முருகன், மருத்துவக் குழுவினரின் அறிவு ரையை ஏற்று நேற்று உண்ணா விரதத்தை கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற கரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். முருகன், நெருங்கிய உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் கடந்த மாதம் குரூப் சாட்டிங் முறையில் பேசியுள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் உறவினர்களிடம் முருகன் பேசுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்துவந்தார். அவ்வப்போது முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. கடந்த 15-ம் தேதி மாலை முருகனின் உடல் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகனை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதில், முருகனின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது. இதனால், முருகனை மீண்டும் மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை சிறைக்குள் மீண்டும் அனுமதிக்க மறுத்த மத்திய சிறை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தாமரை கண்ணன், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார். இதையடுத்து, முருகனை காவல் துறையினர் மீண்டும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முருகனிடம் மருத்துவக் குழுவினர் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது உடல் நிலை குறித்து எடுத்துக்கூறியதுடன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூறினர்.
இதனையேற்று இளநீர் குடித்த முருகன், 25 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நேற்று கைவிட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு, முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago