நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் 25-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு முன்பதிவு செய்பவர்களுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர், என கோயில் உதவி ஆணையர் பி.ரமேஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். வரும் 25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையின்படி இந்த ஆண்டு விழா நடைபெறும்.

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பரம பத வாசல் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கோயில் பூஜைகள் காலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை யூடியூப் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும். அதேவேளையில் அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதற்காக பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும் பக்தர்கள் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். 1 மணி நேரத்திற்கு 1500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். 750 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களும், 750 பேர் முன்பதிவு டோக்கன் பெற்றவர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் அணிந்து கோயிலில் நுழைந்தவுடன் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்படும்.

பின்னர் பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப இலவச தரிசனம், ரூ.25 கட்டண தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் வழிகளில் சமூக இடைவெளியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் தேங்காய், பழம், பூ மாலை உள்ளிட்ட பூஜை சாமான்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்படமாட்டாது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்