போலி வாகன நிறுவனம் நடத்தி பண மோசடி தனியார் வங்கி முன்னாள் மேலாளர் கைது

By செய்திப்பிரிவு

போலி வாகன நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் மேலாளரை, திருப்பூர் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர் ராயபுரம் விரிவு எஸ்பிஐ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கே.சூரியபிரகாஷ். இவர், மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "திருப்பூர் காந்தி நகர் இ.பி.காலனி 5-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கோகுலகிருஷ்ணன் (32). இவர், தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருவதாக அறிமுகமாகி பழகி வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் வங்கி பணியிலிருந்து நின்றுவிட்டதாகவும், ஹரிணி அசோசியேட்ஸ் என்ற பெயரில், வங்கிகளில் இருந்து கார்களை பெற்று வெளியே விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் தனது தொழில் அபிவிருத்திக்கு பணம் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் வரும் லாபத்தில் கார்ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறினார். அதன்பேரில் அவருடன் ஒப்பந்தம் செய்து, அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.22 லட்சத்து 94,500-ஐ ஆன்லைன் மூலமாக அனுப்பிவைத்தேன்.

பணத்தை எடுத்துக்கொண்ட அவர் ஒப்பந்தப்படி நடக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, காலம் தாழ்த்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன் அவரது அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது ஆபாசமாக பேசியும், பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர்க.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர் க.பாலமுருகன் தலைமையில் ஆய்வாளர் சொர்ணவள்ளி அடங்கிய மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார், கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கோகுலகிருஷ்ணனை நேற்று முன்தினம் பிடித்து, விசாரணைக் குப் பிறகு நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "அவரிடம் நடத்திய விசாரணையில், போலி வாகன நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்