நூல் விலை ஏற்ற, இறக்கத்தால் பாதிப்பு பிரதமர் மோடிக்கு சைமா கடிதம்

தென்னிந்திய பனியன் உற்பத்தி யாளர்கள் சங்கம் (சைமா) தலைவர்ஏ.சி.ஈஸ்வரன், பிரதமர் மோடிக்கு நேற்று அனுப்பிய கடித விவரம்:

திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள், பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் மற்றும் கைத்தறித் தொழில் என அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நூல் பிரதானமான மூலப் பொருளாகும். நூலின் விலை சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், விலையை முறையாக நிர்ணயிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சீரான முறையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏ, பி, சி என்றுபருத்தியை தரம் பிரித்து, நியாய மான ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயி தனது உற்பத்தி பொருளை தரம் வாரியாக சந்தைப்படுத்தி விற்கும் போது, தனியார் ஜின்னர்ஸ் வாங்கிஅரைக்கிறார்கள். நூற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்வதில் சீரான விலைக்கு கிடைக்கிறது. பஞ்சு வாங்கி விற்கும் தனியார் வியாபாரிகள், தேவைக்குமேல் இருப்பு வைத்து சீசன் முடிந்தவுடன் அதிக விலை வைத்து விற்கிறார்கள்.

விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை தனியார் தரமறுக்கும்போது, காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கொள்முதல் செய்து, உடனடியாக சந்தைப் படுத்தி நூற்பாலைகளுக்கு விற்கும்போது, தடையில்லாமல் சீரான விலையில் பஞ்சு கிடைக்கும். நூல் விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாதபோது ஜவுளி நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படாது. காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கொள்முதல் செய்து இருப்பு வைத்து விற்கும்போது, சில சமயங்களில் தனியார் நிர்ணயிக்கும் விலையை விட கூடுதல் விலை நிர்ணயம் செய்கிறது.

மேலும், சிறு, பெரு ஆலைகள், என வேறுபாடு பார்க்காமல் 100 பேல் கொள்முதல் செய்தால் அதிக விலை, 10 ஆயிரம் பேல் கொள்முதல் செய்தால் தள்ளு படியுடன் குறைந்த விலை என்று நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் பயனடையும். நூற்பாலைகள், பின்னலாடைத் தொழில், விசைத்தறி, கைத்தறி தொழில்களின் சீரான இயக்கத் துக்கு, எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்