காளையார்கோவில் அருகே நள்ளிரவில் இயங்கிய ஒரே பேருந்தும் நிறுத்தப்பட்டதால் 25 கிராமத்தினர் தவிப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நள்ளிரவில் இயக்கப்பட்டு வந்த ஒரு பஸ்ஸும் நிறுத்தப்பட்டதால் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே சூராணத்தைச் சுற்றி இலந்தக்கரை, கோடிக்கரை, கூத்தக்குடி, தவளி மண்டபம், வேளாங்குளம், சாத்திசேரி, மகரந்தை, கீராம்புளி, சிங்கணி, பாலையேந்தல், விளாங்காட்டூர், தோண்டியூர், வடக்கு மாரந்தை உட்பட 25 கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்கள் பயன் பெறும் வகையில், மதுரையில் இருந்து சூராணத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், இந்தச் சாலையில் உள்ள நாட்டார்கால் ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பஸ் நிறுத்தப்பட்டது.

அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2013-14-ல் ஒரு கோடி ரூபாய் செலவில் 2 பாலங்கள் கட்டப்பட்டன. பாலம் திறக்கப்பட்ட போதிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு கொடுத்ததையடுத்து, மதுரையில் இருந்து சூராணத்துக்கு மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் இரவு 9 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் சென்று வந்தது. மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இரவில் இயங்கி வந்த அந்த பஸ்ஸும் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது பல இடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் இருந்து சூராணத்துக்கு பஸ் இயக்கவில்லை. 9 மாதங்களுக்கும் மேலாக பஸ் வசதி இன்றி 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர். இதுபற்றி போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, ‘கிராமங்களுக்குப் படிப்படியாக பஸ்களை இயக்கி வருகிறோம்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்