ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பல்லாந்தாங்கல் ஊராட்சியில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அதே கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு கடந்த 3 வாரமாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பல்லாந்தாங்கல் கூட்டுச்சாலையில் காலிக் குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தவலறிந்த ஆரணி கிராமிய காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களிடம் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்து, சாலை மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் வேலு, ஓரிரு நாளில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago