உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனம் எரிப்பு தேநீர் கடை உரிமையாளர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதவி ஆய்வா ளர் சம்பத்தின் இரு சக்கர வாகனம் நேற்று அதிகாலை தீயிட்டு எரிக்கப் பட்டுள்ளது. தீ வைத்து எரித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து, தண்ணீரை ஊற்றி காவலர்கள் தீயை அணைத் துள்ளனர். இதில், வாகனத்தின் மேல் பகுதி எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, தீ வைத்து எரித்த நபரை கைது செய்ய உத்தரவிட்டார். இது குறித்து வடவணக்கம்பாடி காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அதில், உதவி ஆய்வாளர் சம்பத் மூலம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர், இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எட்டித்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் பரந்தாமன். இவர், தனது மகளுக்கு திருமணம் செய்துள்ளார். இதற்காக, மழையூர் கிராமத்தில் வசிக்கும், தனது நண்பரான தேநீர் கடை உரிமையாளர் ராமச்சந்திரன்(55) மூலம் நகைக்கடை ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடனுக்கு நகை வாங்கி உள்ளார். பின்னர், நகைக்கான கடனை பரந்தாமன் செலுத்தவில்லை.

இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமச் சந்திரன், பரந்தாமனை கடந்த மாதம் 8-ம் தேதி தாக்கியுள்ளார். இது குறித்து பரந்தாமன் கொடுத்த புகாரின் பேரில் வட வணக்கம்பாடி உதவி ஆய்வாளர் சம்பத் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திரனை கடந்த 2-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்அவரது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் ராமச்சந்திரன் நேற்று முன்தினம் வெளியே வந்துள்ளார். பின்னர் அவர், வட வணக்கம்பாடி காவல் நிலையத்துக்கு நேற்று அதிகாலை சென்று, பறிமுதல் செய்த இரு சக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சம்பத்திடம் பேசிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர், வெளியே செல்லும்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதவி ஆய்வாளர் சம்பத்தின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்துவிட்டு தப்பியோடிவிட்டார்” என்றனர். இது குறித்து வட வணக்கம்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்