அவிநாசி பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க கோரி மறியல்

By செய்திப்பிரிவு

அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையம் 2-ம் திட்ட குடிநீர் மாதக் கணக்கில் சீராக விநியோகிக்கப்படாததால், பொது மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இதையடுத்து, அனைத்து வார்டு பொதுமக்களும் ஒன்றிணைந்து, காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவிநாசி- சேவூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸார், பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர் மழை, குழாய் அடைப்பு, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. விரைவில் சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்கப்படும். தற்போது, மூன்று மணி நேரத்துக்குள் குடிநீர் வழங்கப்படும் என பேரூராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அவிநாசி - சேவூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்