கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தற்போது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும், அணையின் வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 87 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 93 கன அடி வீதமும் என மொத்தம் 180 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ர அள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம்,பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜன அள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். அத்துடன் நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப் பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், வேளாண்மை இணை இயக்குநர்கள் ராஜேந்திரன், பச்சையப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

பாரூர் ஏரி

போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்துக்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 2021 ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முடிய 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி பாரூர் பெரிய ஏரியில் நேற்று தண்ணீரை வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி திறந்து வைத்தார்.

பாரூர் ஏரியில் இருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கன அடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 70 கன அடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர், பிறகு முறைப்பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும். 4 நாட்கள் மதகை மூடிவைத்தும் 2-ம் போக திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் 6 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்