கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பென்ரஹள்ளி எம்.ஜி.ஆர்., நகர் இருளர் காலனியைச் சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 30 கிராமங்களில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் காலம் காலமாக அருகில் உள்ள காடுகளில் தேன், கிழங்கு, புளியங்காய், சீதா பழம் மற்றும் நெல்லிக்காய்களை பறித்து பிழைத்து வருகிறோம். இதற்காக காட்டிற்குள் செல்வதற்கு வனத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தேனி மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு இதே போன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த அனுமதி சீட்டை முன்னாள் ஆட்சியர் பிரபாகரிடம் காட்டிய போது, அவர் தகுதி உள்ள நபர்களுக்கு அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்காமல் உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் பெரியமலை வனத்தில் உள்ள வனதேவதை திருவிழாவை நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு அனுமதி அட்டை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago